சனிப் பெயர்ச்சி பலன்கள்
சனிப் பெயர்ச்சி பலன்கள்
கடந்த மூன்று ஆண்டுகளாக ‘அஷ்டமத்துச் சனியின்’ பிடியில் சிரமத்தினை அனுபவித்து வந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மையைத் தரும். கஷ்டத்தினைத் தரும் எட்டாம் இடத்திலிருந்து விலகி ஒன்பதாம் இடத்திற்குள் நுழையும் சனி இத்தனை நாட்களாக தந்த சிரமத்திற்கு மாற்றாக நற்பலனைத் தரத் துவங்குவார். தொழில்முறையில் இதுநாள் வரை சந்தித்த தடைகள் விலகும். எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். அமைதியான முறையில் அதிக ஆர்ப்பாட்டம் இன்றி பொருள் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும்.
கடன்பட்டாவது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. சொத்துக்களை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஸ்திரமாகப் பதியும். பொதுவாக ஒன்பதாம் இடத்துச் சனி தனலாபக் குறைவு, எதிரிகள் வலுப்பெறுதல், அடுத்தவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை ஆகியவற்றை பலன்களாகத் தருவார் என்று சொல்வார்கள். இதற்கு சனி பகவானின் பார்வை நிலையே காரணமாக அமைகிறது. சத்ரு ஸ்தானம் ஆகிய 6ம் இடத்தையும், 11ம் இடமாகிய லாப ஸ்தானத்தையும், 3ம் இடம் ஆகிய தைரிய ஸ்தானத்தையும் சனி பகவான் பார்ப்பதால் மேற்சொன்ன பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட விதி. ஆயினும் மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்த வரை சனி பகவானே லாபாதிபதியாக அமைவதால் சுபபலனே கிட்டும்.
மாணவர்கள்:
கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். படிக்க வேண்டிய நேரத்தில் மனம் ஒருமுகப்படாது அங்குமிங்கும் அலைபாயும். இந்நிலையைத் தவிர்க்க முடிந்தவரை தனிமையத் தவிர்த்துவிட்டு நண்பர்களோடு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் தொழில்துறை மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பிராக்டிகல் வகுப்புகளில் மாணவர்களின் ஆர்வம் கூடும்.
பெண்கள்:
பிரச்னைகள் உருவாகும்போது நம்மீது தவறில்லை என்றாலும் கூட அடங்கிப் போகுதல் நன்மை பயக்கும். இதனால் அநாவசிய அவமானத்தினைத் தவிர்க்கலாம். மனக்கவலைகளை மனதிலேயே பூட்டி வைத்துக் கொள்ளாமல் கணவரிடம் உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதால் மனதில் தெளிவு பிறக்கக் காண்பீர்கள். உறவினர்களால் தோன்றும் குழப்பங்களை மிகைப்படுத்தாது அப்படியே விட்டுவிடுவது நல்லது. பிள்ளைகளால் உங்கள் கௌரவம் உயரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் சுப நிகழ்வு குடும்பத்தில் நடந்தேறும்.
தொழில் உத்யோகம்:
தொழில் முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இதுநாள் வரை தொழில் ரீதியாக கண்டு வந்த தடை விலகும்.மிகவும் ‘பிஸி’யாக இருப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு வந்து சேரும். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். உங்களுக்கு வரவேண்டிய தனலாபம் என்பது சீரான முறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். வாழ்வியல் தரத்தினில் சனிபகவானால் உயர்வு காண்பீர்கள்.
பரிகாரம் :சிறிய கருங்காலிக் கட்டையினால் ஆன பலகையின் மேல் முக்கோண வடிவில் துவரை தானியத்தைப் பரப்பி செம்பு உலோகத்தால் ஆன அகல் விளக்கில் நெய் + நல்லெண்ணெய் கலவையை ஊற்றி சிகப்பு நிற நூலினால் ஆன திரியை தென்மேற்கு முகமாக ஏற்றி வைத்து சனிக்கிழமை தோறும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். சனியின் திருவருளால் உயர்வு காண்பீர்கள். “நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கஸ்ம ஸ்ருஜடாய ச நமோ விஸால நேத்ராய ஸூஷ்கோதர பயாக்ருதே!”
ரிஷபம்
ரிஷப ராசிக்கு எட்டாம் இடமாகிய தனுசு ராசிக்குள் இடம் பெயர்ந்து உங்களை ‘அஷ்டமத்துச்சனி’ என்னும் நிலைக்கு உள்ளாக்குகிறார் சனிபகவான். எட்டாம் இடத்தில் சனி வரும் காலத்தே சகல விதமான கஷ்டங்களையும் தருவார் என்பது பொதுப்பலனாகச் சொல்லப்பட்டாலும், கடமையைச் சரிவர செய்பவரை சனிபகவான் காப்பார் என்பதில் ஐயமில்லை. சுகத்தினைத் தரும் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் நீங்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டு காலமும் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். அஷ்டமத்துச் சனியின் காலத்தே முயற்சிகளில் தடை, உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிதல், உடல் நலக் குறைவு, நற்பெயருக்குக் களங்கம் போன்ற பலன்களை அனுபவிக்க நேரிடும் என்று சொல்வார்கள்.
ஆனாலும் ஜனன ஜாதக ரீதியாக தற்காலம் சிறப்பான தசாபுக்தி நடக்கக் காண்பவர்கள் மேற்சொன்ன பலன்களின் தாக்கத்தினை குறைவாக அனுபவிப்பார்கள். சனி பகவானின் எட்டாம் இடத்து வாசம் நினைத்த காரியம் எளிதில் நடைபெறாமல் இழுபறியைத் தரும் நிலையை உருவாக்கும். செலவுகள் கூடுவதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடங்கல் உண்டாகக் காண்பீர்கள்.அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருத்தல் நலம். நண்பர்களுக்கிடையே மத்யஸ்தம் செய்யப்போய் நீங்கள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ உதவுவதற்காக கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. உங்கள் நேரம் அவரால் திருப்பித்தர இயலாத சூழல் உருவாகலாம். அதேபோன்று அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கவும் கூடாது. முக்கியமான விவகாரங்களை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்கும்போது நீங்கள் ஏமாற்றப்படக் கூடும்.
மாணவர்கள்:
தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடின உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஞாபகமறதியினால் தேர்வினில் சிரமத்தினை சந்திக்க நேரிடும். வீண்பழி சுமக்கும் வாய்ப்பு உள்ளதால் அரசுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பாடங்களைப் படிக்கும்போது சிந்தனைச் சிதறலும், மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்வதும், வீண் குழப்பமும் உண்டாகும். கலைப்பிரிவு மற்றும் மொழிப்பாடங்களில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பெண்கள்:
ஞாபக மறதியின் காரணமாக அடிக்கடி சிரமத்தினை சந்திப்பீர்கள். அதிமுக்கியமான பொருட்களை எங்காவது வைத்துவிட்டு அல்லல்பட நேரிடும். இதனால் சுற்றியுள்ளவர்கள் மீது தேவையற்ற வீணான சந்தேகம் தோன்றி அதனால் பெரிய பிரச்சினைகள் உருவெடுக்கக் கூடும். குடும்பத்தினரிடம் வீண் விவாதம் செய்யாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். பொன் ஆபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைக்கும்போது அதிக கவனம் தேவை.
தொழில் உத்யோகம்:
ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் சனியின் சிறப்புப் பார்வை தொழிலில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும். குறைந்த லாபத்திற்காக அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருந்துவரும். கவலைப்படாதீர்கள். நிச்சயமாக சனி பகவான் இறுதியில் பெருத்த லாபத்தினைத் தந்துவிட்டுச் செல்வார். தொழிலதிபர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. உத்யோகஸ்தர்கள் தங்களுக்குக்கீழ் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
பரிகாரம் :சிறிய அத்திப்பலகையின் மேல் மொச்சை தானியத்தை ஐங்கோண வடிவில் பரப்பி காமாக்ஷி அம்மன் விளக்கில் கெஜலக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி நாணயத்தை வைத்து நெய் ஊற்றி பட்டுநூலினால் ஆன திரியை கிழக்கு முகமாக ஏற்றி சனி தோறும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வெண்மை நிற மலர்கள் தூவி வணங்குங்கள். வளம் பெறுவீர்கள். “ப்ரஸாதம் குரு மே தேவ வரார்ஹோஹ முபாகத: கூவம் ஸ்துதஸ் ததா ஸௌரிர் க்ரஹராஜோ மஹாபல:”
மிதுனம்
புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் நேரத்திற்குத் தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்கள் என்பதால் சனி பகவானின் சோதனைகளை அழகாக சமாளிப்பீர்கள். கண்டச்சனி காலத்திற்குள் நுழைகிறோமே என்ற பயம் தேவையில்லை. பயம் ஒன்றே உங்கள் முதல் எதிரி. மனதிற்குள் எச்சரிக்கை உணர்வு நிறைந்திருந்தாலும், அதனை முகத்தில் வெளிக்காட்டாது செயல்படுங்கள். ஏழாம் வீட்டில் சனி நின்ற பலனாக தூரதேசம் செல்லுதல், மனக் குழப்பம், வாழ்க்கைத்துணைக்கு தோஷம் ஆகியவை கூறப்பட்டிருந்தாலும், மிதுன ராசியைப் பொறுத்த வரை வரும் ஆவணி வரை குருவின் பார்வை இருப்பதால் கவலை இல்லை. அடுத்த ஆண்டு நிகழும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கும். வசதி, வாய்ப்புகள் இருந்தும் சரியான நேரத்திற்குச் சுவையான உணவு உட்கொள்ள இயலாது போகும். கண்பார்வையில் ஒரு சில கோளாறுகளைச் சந்திக்க நேரலாம். பிரயாணத்தின்போதும், வாகனங்களை இயக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாக கொண்டு செல்லும் பொருட்களின் மீது கவனம் வைப்பது நல்லது. ஞாபக மறதியினால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். கண்டச்சனியின் காலத்தில் கண்டிப்பாக வட்டிக்குப் பணம் கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்க வேண்டும். உங்களோடு நட்புறவு கொண்டிருந்த நபர் ஒருவர் உங்களின் எதிரியோடு உறவாடும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள்:
மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சனி பகவான் துணை நிற்பார். சரியான புள்ளிவிபரத்துடன் படித்து குறிப்பிடத்தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடன் படிக்கும் நண்பர்களிடம் கூடுதல் கவனம் தேவை. அவர்களுக்கு உதவி செய்யப்போய் நீங்கள் வீண்பழி சுமக்க நேரிடும். காமர்ஸ், எகனாமிக்ஸ், அக்கவுண்டன்சி மற்றும் ஆடிட்டிங் துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பர்.
பெண்கள் :
கண்டச்சனியின் பிரதானமான பலனாக வாழ்க்கைத்துணைக்கு தோஷம் உண்டாகும் என்று சொல்வார்கள். முக்கியமாக கணவரின் உடல்நிலையிலும், மனநிலையிலும் உங்களின் உதவி அவருக்குத் தேவைப்படும். தம்பதியருக்குள் தோன்றும் பிணக்குகளில் நீங்களே அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அவரது குடும்பத்தாரிடம் உங்களின் மதிப்பு குறையலாம். முன்பின் தெரியாத பெண்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. உறவினர்களோடு வீண்விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிப்பது அவசியம். உடல்நிலையைப் பொறுத்த வரை அடிவயிறு பகுதியில் உண்டாகும் வலியை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது.
தொழில் உத்யோகம்:
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்குச் செல்ல இயலாத வகையில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம். இவற்றை சனிபகவானின் சோதனையாகக் கருதி மனம் தளராது செயல்பட்டீர்களேயானால் தடைகள் விலகும். அலுவலகத்தில் உடனிருப்போர் தங்கள் பொறுப்பினை உங்கள் தலையில் சுமத்தி அவர்கள் விலகிக் கொள்வார்கள். உங்கள் பணியில் முழுதிருப்தி காண்பீர்கள். உத்யோக ரீதியாக தூரதேசம் செல்லும் வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு உருவாகும். ஜீவன ஸ்தானத்திற்கு 10ல் சனி வருவதால் சுயதொழிலிலும், கூட்டுத்தொழிலிலும் லாபத்தினைப் பெற்றுத் தருவார். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் மிகுந்த ஏற்றம் காணும்.
பரிகாரம் :சிறிய தேக்குமரப் பலகையில் பச்சைப்பயறு தானியத்தை அம்பு வடிவில் பரப்பி பித்தளை அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பச்சைநிற நூலினால் ஆன திரியை வடகிழக்கு முகமாக ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து சனிதோறும் வழிபடுங்கள். “நம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்ட நிபாய ச நம: காலாக்நி ரூபாய க்ருதாந்தாய ச வை நம:”
கடகம்
சத்ரு, ரோகம், ருணம் என்றழைக்கப்படும் எதிரி, நோய் மற்றும் கடன்தொல்லை ஆகியவற்றைக் குறிக்கும் ஆறாம் இடத்திற்கு சனி பகவான் பிரவேசம் செய்ய உள்ளதால் இவை அனைத்தையும் சனி பகவானின் துணையுடன் வெற்றி கொள்வீர்கள். ஜாதகத்தில் சனியின் பலம் அதிகமாகக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் நற்பலன்கள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை. சனிபகவான் ஆறாம் இடத்தில் அமர்வதால் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் விரைவில் முடிவிற்கு வரும். பங்காளிகளுக்குள் சச்சரவுகள் உருவாகும். பூர்வீகச் சொத்துக்களில் புதிய வில்லங்கங்கள் உருவாகக் கூடும்.
தகப்பனார் வழி உறவினர்களால் கலகம் பிறக்கலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களில் நல்லவர், தீயவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். சுயநலவாதிகளின் சகவாசத்தை அடியோடு துண்டித்துக் கொள்வீர்கள். இதுவரை ஐந்தாம் இடத்தில் வசித்து வந்த சனி பகவான் தற்போது ஆறாம் வீட்டிற்கு இடம் பெயர உள்ளதால் வாழ்வியல் நிலையில் மிகுந்த சௌகரியத்தினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்தரம் மேம்படும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் குணம் உண்டாகும். அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். அசையாச் சொத்துக்களில் அதிக முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உடலில் தோன்றும் பிரச்சினைக்கு ஆயுர்வேத மருத்துவம் உடனடி நிவாரணத்தைப் பெற்றுத் தரும்.
மாணவர்கள் :
அவ்வப்போது தலையெடுக்கும் சோம்பலை நீக்கி அயராது உழைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ட் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள்:
வாழ்வியல் நிலையில் மிகுந்த சௌகர்யத்தினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்தரம் மேம்படும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் குணம் உண்டாகும். அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவீர்கள். கணவரின் மனநிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. அவரது விருப்பங்களைப் புரிந்துகொண்டு நன்மை, தீமையை விளக்கிச் சொல்வதன் மூலம் கருத்துவேறுபாடுகளைத் தவிர்க்கலாம்.
தொழில் உத்யோகம்:
அரசாங்க உத்யோகஸ்தர்கள் அனுகூலமான நிலை காண்பார்கள். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும்.சுயதொழில் செய்வோரில் கட்டிடக்கலை நிபுணர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள், அழகுக்கலை நிபுணர்கள், சமையல் கலைஞர்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். குறைந்த லாபத்தில் வியாபாரம் செய்வதன் மூலம் ஜவுளித்துறையில் இருப்பவர்களுக்கு தொழில் தொடர்ந்து சிறப்பாக நடக்கும்.
பரிகாரம் :வரும் சனிப்பெயர்ச்சி நாள் அன்று உங்கள் வசதிக்கேற்ப புதிய ஈயபாத்திரம் வாங்கி, பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகையை நிரப்பி அந்தணர் ஒருவருக்கு தக்ஷிணையுடன் தானம் செய்யுங்கள். சனிதோறும் பூஜையறையில் பச்சரிசி மாவினால் கோலமிட்டு அதில் மேற்கு முகமாக நெய்விளக்கேற்றி வெள்ளை நிற மலரினால் அர்ச்சித்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள். “கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே ஸ்ரீமத் வேங்கடநாதாய ஸ்ரீநிவாஸாய மங்களம்.”
சிம்மம்
இதுநாள் வரை அர்த்தாஷ்டம சனியினால் சிரமப்பட்டு வந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சற்று ஆறுதலைத் தரும். பொதுவாக ஐந்தாம் இடத்து சனியினால் அதிக லாபமோ, செய்யும் தொழிலில் முன்னேற்றமோ உண்டாகாது. எனினும் சரியாகத் திட்டமிட்டு செயல்படும் பட்சத்தில் சிறப்பான வெற்றியைக் கண்டு வருவீர்கள். சிம்ம ராசியைப் பொறுத்த வரை களத்ர ஸ்தானம் ஆகிய 7ம் இடத்திற்கு அதிபதி சனி பகவான் ஐந்தாம் இடத்தில் அமர்வதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறக் காண்பீர்கள். நெடுநாட்களாக மனதினில் இருந்து வரும் ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறும். உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவரை தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். காதால் கேட்கும் வீண் வதந்திகளை நம்பி நிச்சயமாக செயலில் இறங்கக் கூடாது.
எந்த ஒரு விஷயத்திலும் தீர விசாரித்து அதன்பின் முடிவு செய்யுங்கள். உங்களது மனதில் இரக்கம், தியாகம் பற்றிய சிந்தனைகள் பிரதானமாக இடம்பிடிக்கும். விளையாட்டு விஷயங்களில் மனம் அதிக ஈடுபாட்டுடன் செயல்படும்.லாட்டரி, சூதாட்டம் போன்ற விஷயங்களில் மனக்கட்டுப்பாடு தேவை. ஆடம்பர செலவுகளால் உண்டாகும் வீணான பொருள் விரயம் என்பது தடுக்கப்படும். உறவினர்கள் மத்தியில் கருமி, கஞ்சன் என்ற பெயர் எடுக்க நேரிடலாம். சனி பகவான் உங்களுக்கு பொருளைச் சேமிக்கும் சூட்சுமத்தைக் கற்றுத் தருவார். மனக்குழப்பத்தின் காரணமாக இரவினில் நிம்மதியான உறக்கம் கெடும்.இக்கட்டான சூழலில் அவ்வப்போது நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். உங்கள் பலமே தன்னம்பிக்கை ஒன்றுதான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாது கடமையைச் சரிவர செய்து வாருங்கள். சனியின் அருளால் நல்லதே நடக்கும்.
மாணவர்கள் :
தங்கள் கல்விநிலையில் இதுநாள்வரை இருந்து வந்த தடைகள் விலகக் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ் துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உயர்கல்வி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி காணும் நேரம் இது.
பெண்கள்:
தோற்றத்தில் பொலிவு கூடும். ஐந்தாம் இடத்தில் சனி பகவான் அமர உள்ளதால் பிள்ளைகளின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். அடிக்கடி அவர்களது செயல்களை கண்காணித்து அவ்வப்போது தகுந்த புத்திமதிகளைத் தன்மையாகச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். கணவரின் வாயிலாக பல வழிகளிலும் நன்மை காண்பீர்கள். களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் இடத்திற்கு லாபத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளது மிகுந்த நன்மையைத் தரும். கணவரின் பெயரில் புதிய சொத்துக்கள் சேரும். தெளிவான முடிவெடுக்க இயலாத சூழலில் கணவரின் ஆலோசனைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும்.
தொழில் உத்யோகம்:
தொழில் ரீதியான முன்னேற்றம் தடைபடும் காலம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல. ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழில் சிறப்பான லாபத்தினைத் தரும். ஆயினும் அடையும் லாபத்தினை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டியிருக்கும். கையிருப்பில் பணம் இல்லாது சிரமப்பட நேரிடும். உத்யோகஸ்தர்கள் அதிக அளவிலான சேமிப்பிற்கு ஆசைப்பட்டு அதனை சரிவரத் தொடர சற்று சிரமப்படுவார்கள். அரசியல், ஜூவல்லரி, நகை அடகு வட்டிக்கடை துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
பரிகாரம் :ஒரு பலகையில் எருக்க இலையை வைத்து அதில் கோதுமையை வட்டவடிவில் பரப்பி தாமிர உலோகத்தால் ஆன அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சிகப்புநிற நூலினால் ஆன திரியை கிழக்கு முகமாக ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி தாமரை இதழ்களால் அர்ச்சித்து சனி தோறும் வழிபட்டு வாருங்கள். “நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்து தே ஸூர்யபுத்ர நமஸ்தே அஸ்து பாஸ்கரே பயதாய ச.”
கன்னி
அர்த்தாஷ்டம சனியின் காலத்திற்குள் அடியெடுத்து வைக்கும் கன்னி ராசிக்காரர்கள் சற்றே சோதனையைச் சந்திக்க உள்ளார்கள். நான்காம் இடத்துச் சனி நன்மை தருபவர் அல்ல. பொதுவாக சனி நான்காம் இடத்தில் அமரும்போது நமது நம்பிக்கைக்கு உரியவர்களையும், நலம் விரும்பிகளையும், குடும்பத்தினரையும், நாம் மிகவும் விரும்பும் நபர்களையும் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இடம் விட்டு இடம் பெயர வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். நல்லது என நினைத்து நாம் செய்யும் செயல் அடுத்தவர்களால் தீய கண்ணோட்டத்துடன் பாரு்க்கப்படலாம். வீணான பொருள் இழப்பு, மற்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை, மன உளைச்சல் போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும். உற்றார் உறவினர்களுடன் பகை, தொழில் முறையில் தேக்க நிலை, சிறுசிறு வாகன விபத்துக்கள் போன்ற சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.
நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம். நான்காம் இடத்தில் சனி அமர்வதால் தாயாரின் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதவி செய்ய இயலாத சூழ்நிலையில் நீங்கள் இருப்பதை உணராத உறவினர்கள் உங்களோடு விரோதம் கொள்வர். நான்காம் இடத்துச் சனியினால் ஒரு சில சிரமங்களைக் கண்டு வந்தாலும், அவரது பார்வையினால் பல நன்மைகளையும் அடைய உள்ளீர்கள். சம்பாதிக்கும் சொத்துக்களைப் பொறுத்த வரையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். வீடு, வண்டி, வாகனம், மனை போன்றவை உங்களின் உழைப்பின் பலனாக உருவெடுக்கும். புதிய சொத்துக்கள் சேரும். உங்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்கொணரும் வகையில் சனி பகவான் துணை நிற்பார்.
மாணவர்கள்:
தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அவ்வப்போது சோம்பல்தன்மை உடலில் தலையெடுக்கும். சிறிதளவு படிக்கும்போதே உடலில் அசதியை உணர்வீர்கள். உங்களின் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. டெக்னிக்கல் சார்ந்த படிப்புகள், கலைத்துறை கல்வி, ஓவியம், நாட்டியம், இசைப்பயிற்சி, சங்கீதம் சார்ந்த மாணவர்கள் கடின உழைப்பினால் முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள்:
கணவரின் துணை அல்லும் பகலும் உங்களுக்குத் தேவைப்படும். அவரோடு கருத்து வேறுபாடு தோன்றும் சமயத்திலும் அவர் உங்களை அழகாகப் புரிந்துகொண்டு உங்களுக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார். தம்பதியராக இணைந்து செயல்படும்போது குடும்பப் பிரச்சினைகள் எளிதில் முடிவிற்கு வரக் காண்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். தொடர்பணியின் காரணமாக ஓய்வெடுக்கும் நேரம் குறையும். சுக ஸ்தானத்தில் சனி அமர்வதால் உடலில் சுகவீனம் தோன்றக்கூடும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும்.
தொழில் உத்யோகம்:
கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் காண்பீர்கள். கமிஷன், தரகு, ஸ்டேஷனரி, உணவுப் பண்டங்கள் வியாபாரம், தானியங்கள் வியாபாரம், திரவப் பொருட்கள், வாசனாதி திரவியங்கள், பால் சார்ந்த வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள். ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் சனியின் பார்வை உத்யோகத்தில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும். உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிசெய்வோரிடம் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும்.
பரிகாரம் :சிறிய வாழையிலையில் பச்சைப்பயறு தானியத்தை அம்பு வடிவில் பரப்பி அதன்மேல் பித்தளை அகல்விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பச்சைநிற நூலினால் ஆன திரியை கிழக்கு முகமாக ஏற்றி வைத்து, சனிதோறும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி மரிக்கொழுந்து இதழ்களால் அர்ச்சிக்க வளம் உண்டாகும். “தபஸா தக்ததேஹாய நித்யம் யோகரதாய ச நமோநித்யம் க்ஷூதார்த்தாய அத்ருப்தாயச வை நம:”
துலாம்
சனிப்பெயர்ச்சியால் சிறப்பான நற்பலன்களை அனுபவிக்க உள்ளோரில் நீங்களும் ஒருவர். ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுதலை காணும் நீங்கள் வருகின்ற மூன்றாண்டு காலமும் ஆனந்தத்துடன் கூடிய வளமான வாழ்வினைக் காண்பீர்கள். காரியத்தடைகள் அனைத்தும் விலகும். பொதுவாக சனி பகவான் மூன்றாம் இடத்தில் வந்து அமரும்போது வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களை அளிப்பார் என்பார்கள். வீடு, வண்டி, வாகனம், மனை, கால்நடை போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் சேரும். நினைத்ததை நடத்தி முடிக்கும் செயல்திறன் அதிகரிக்கும்.சமூக சேவையை மிகுந்த விருப்பத்துடன் செய்து வருவீர்கள். பிறருக்காக உழைப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்.
தன்னலமற்ற உங்களின் செயல்பாடுகள் சிறப்பான கௌரவத்தினைப் பெற்றுத் தரும். ஏழரை சனி காலத்தில் உங்களை விட்டுப் பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வெளியில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகள் விரைவில் வசூலாகும். இதுநாள் வரை கண்டு வந்த பொருளாதார கஷ்டங்கள் சீரடையும். இழுபறியில் இருந்து வரும் வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவினைக் காண்பீர்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படும்போது சிறப்பான காரிய வெற்றி உண்டாகும். புதிய நண்பர்கள் உங்களை நாடி வருவார்கள். அவர்களுடனான நட்புறவின் மூலம் உலகியல் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் மூன்றாவது கரமாக செயல்பட்டு வரும்.
மாணவர்கள் :
மாணவர்களைப் பொறுத்தவரை அயராது உழைக்க வேண்டியது அவசியமாகிறது. அடிக்கடி எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. வித்யா ஸ்தானம் ஆகிய நான்காம் இடத்திற்கு 12ல் சனி பகவான் மறைவதால் அடிக்கடி ஞாபக மறதி தொந்தரவிற்கு ஆளாக நேரிடும். மேலும் மூன்றாம் இடம் என்பது எழுதும் திறனைக் குறிக்கும். சனியின் மூன்றாம் இடத்து அமர்வு நிலை எழுதும் திறனில் ஒரு சில பாதிப்புகளைத் தோற்றுவிக்கலாம். எழுத்தின் வேகம் குறைவதால் தேர்வு நேரத்தில் சிரமப்பட நேரிடும். எனவே பாடங்களை அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம்.
பெண்கள்:
இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தில் இருந்து சனி விலகுவதால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் குடும்ப பிரச்னைகள் தீரும். முக்கியமான பிரச்னைகளில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்றுத் தரும். உங்களின் செயல் வேகத்தினைக் கண்டு உடனிருப்போர் பிரமிப்பிற்கு உள்ளாவார்கள். கணவருக்குப் பக்கபலமாய் இருந்து நான்குபேர் மத்தியில் அவருக்குரிய அங்கீகாரத்தினைப் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றுவீர்கள். அவரது பெயரில் புதிய சொத்துக்களை வாங்க இயலும்.
தொழில் உத்யோகம்:
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். உடன் பணிபுரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர் சிறப்பான தனலாத்தினைக் காண்பார்கள். ஆட்டோ மொபைல்ஸ் துறை, கட்டிடத் துறையில் கீழ்மட்ட தொழில் செய்வோர்கள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். உங்களின் நிர்வாகத்திறன் கூடும். திறமையான பணியாட்கள் வேலைக்குக் கிடைப்பார்கள். பணியாட்கள் உங்களைப் பொறுத்த வரை மிகுந்த விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
பரிகாரம் :சிறிய அத்திப்பலகையின் மேல் அரச இலை வடிவில் மொச்சை தானியத்தை பரப்பி அதன் மேல் வெள்ளி அகல்விளக்கில் நெய்விட்டு பாவுநூல் திரியினை கிழக்கு முகமாக ஏற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வெண்தாமரை இதழ்களால் அர்ச்சித்து சனி தோறும் வணங்கி வாருங்கள். “தேவாஸூர மநுஷ்யாஸ்ச ஸித்தவித்யாத ரோரகா: த்வயா விலோகிதா: ஸர்வே நாஸம் யாந்த ஸமூலத:”
விருச்சிகம்
ஏழரைச் சனியால் கடந்த ஆறு ஆண்டுகளாக பட்ட சிரமங்களைக் கணக்கிடும்போது வரவுள்ள சனிப்பெயர்ச்சி தங்களுக்கு முன்னேற்றத்தினைத் தரும். இதுவரை ஜென்ம ராசியில் அமர்ந்து இவ்வளவு நாட்களாக உங்கள் மன நிலையையும், உடல்நிலையையும் பாதித்து வந்த சனி பகவான் இனி உங்களின் பொருளாதார நிலையை மட்டுமே சோதிப்பார். அவரே நான்காம் வீட்டிற்கும் அதிபதி ஆவதால் பணமாகச் சேராமல் சொத்துக்களுக்காக சேர்க்க வைப்பார். கடன் வாங்கியாவது புதிய வீடு கட்ட முயற்சிப்பீர்கள். நீங்கள் சிரமப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை வீண் விரயமாகாமல் தடுத்தி நிறுத்தி சொத்து சேர்க்க சனி துணையிருப்பார். உங்களுடைய சம்பாத்யம் ஏதோ ஒரு வகையில் சேமிப்பில் சென்றுவிடுவதால் அன்றாட செலவுகளுக்கு சற்று சிரமப்படுவீர்கள்.
பொதுவாக சனிபகவான் இரண்டாம் இடத்திற்கு வரும்போது குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழலும், தூரதேச சஞ்சாரமும், பொருளாதார ரீதியாக சிரமப்பட வேண்டிய நிலையும், திருட்டு பயமும் உண்டாகும் என்று சொல்வார்கள். இருந்தாலும் ஆதியில் ஜனன ஜாதகத்தில் சனியின் பலம் பெற்றவர்களுக்கும், தற்காலத்தில் வலுவான தசாபுக்தி நடைபெறுபவர்களுக்கும் மேற்சொன்ன பலன்களின் பலம் குறைவாகவே இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் யாருக்கும் எளிதாக எவ்விதமான வாக்குறுதியும் அளிக்காதீர்கள். நிஷ்டூர வார்த்தைகள் வாயிலிருந்து வெளிப்படக் கூடும். கோபத்துடன் யாரையாவது ஏதாவது திட்டினோமேயானால் அது அப்படியே நடந்துவிடும் என்பதால் தீயசொற்களைத் தவிர்த்து முடிந்தவரை நற்சொற்களையே பயன்படுத்துவது நல்லது.
மாணவர்கள் :
இதுநாள்வரை இருந்த மந்தநிலை விலகும். பாடங்களைப் புரிந்து படிப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். வித்யா ஸ்தானாதிபதி சனி வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் பேச்சுத் திறன் கூடும். உங்களில் பலரும் பேச்சாளர்களாக உருவெடுப்பீர்கள். இருப்பினும் ஆசிரியரிடம் நற்பெயர் எடுக்க போராட வேண்டியிருக்கும். மொழிப்பாடங்கள், அறிவியல், இன்ஜினியரிங் துறை மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
பெண்கள்:
எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகள் என்பது சற்று சிரமத்தினைத் தரக்கூடும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. குழப்பமான விவகாரங்களில் கணவருடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுங்கள். சொத்து விவகாரங்களில் இருந்து வரும் பிரச்னைகள் விலகும். உறவினர்களால் சற்று கூடுதல் செலவுகளுக்கு ஆளானாலும் கூட மனநிம்மதி காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை உயர்வடையும். வீட்டினில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொழில் உத்யோகம்:
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வின் பேரில் இடமாற்றம் உண்டு. தேடிவரும் இடமாற்றத்தினை ஏற்றுக்கொள்ள மறுக்காதீர்கள். எப்படி இருந்தாலும் சிறிது காலம் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்பதால் பதவி உயர்விற்கான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி தொழில், தோல், சிமென்ட், இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம் போன்றவை சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தனித்துவத்தை நிரூபிப்பார்கள்.
பரிகாரம் :சனிப்பெயர்ச்சி நாளில் செம்பு பாத்திரம் நிறைய துவரை தானியத்தை நிரப்பி, சிகப்பு நிற வஸ்திரத்துடன் அருகில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலய அர்ச்சகருக்கு இயன்ற தக்ஷிணையுடன் தானம் அளித்து வணங்க நன்மை உண்டாகும். சனி தோறும் தென்மேற்கு முகமாக தேங்காய் எண்ணெய் விளக்கேற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வணங்கி வர தடைகள் விலகும். “கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்ந: ஸ்கந்த ப்ரசோதயாத்”
தனுசு
ஜென்மச் சனியின் பிடிக்குள் நுழைய உள்ளீர்கள். இதுநாள்வரை உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் தற்போது உங்களின் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக ஜென்மச் சனிக்குரிய பலனாக மனக்குழப்பம் தோன்றும் என்று சொல்லப்பட்டாலும் தனுசு ராசிக்காரர்கள் கவலைப்படத் தேவையில்லை. தனம் மற்றும் தைரிய ஸ்தானங்களுக்கு அதிபதியாகிய சனி பகவான் ஜென்ம ராசியில் அமர்வது நன்மையைச் செய்யும். புதிய சொத்துக்கள் சேரும். ஜென்மச்சனியால் நன்மை காணும். அதேநேரத்தில் சனியின் இயற்கை குணத்தினால் ஒரு சில சோதனைகளை சந்திப்பீர்கள். ஞாபக மறதித் தொந்தரவால் அதிகம் அவதிப்பட நேரிடும்.
முக்கியமாக நகை, பணம், சொத்துப் பத்திரங்கள், முக்கியமான தஸ்தாவேஜூகள் ஆகியவற்றைக் கையாளும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். எதையும் எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. ஞாபக மறதியினால் உண்டாகும் மன உளைச்சலினால் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதோடு அதிக அலைச்சலுக்கும் ஆளாவீர்கள். உங்கள் ஆலோசனைகளை அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட அதனை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுவீர்கள். யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாது தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை தயங்காது செய்து வருவீர்கள். இந்நிலை அடுத்தவர்களின் கண்களுக்கு உங்களின் பிடிவாத குணமாகத் தோன்றும். ஒரு சில விஷயங்கள் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்கி வெற்றி காண முயற்சிப்பீர்கள்.
மாணவர்கள்:
மாணவர்களைப் பொறுத்தவரை அவ்வப்போது ஞாபக மறதித் தொந்தரவிற்கு ஆளாவார்கள். அன்றாடப் பாடங்களை அன்றன்றே எழுதிப் பார்ப்பது நல்லது. அயராது உழைத்தால் மட்டுமே நினைத்த வெற்றியைத் தேர்வினில் அடைய முடியும். நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை தரும். இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், சட்டம், ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பள்ளிப்பாடம் தவிர இசை, நடனம், ஓவியம் போன்ற தனித்திறமைகள் பெற்றிருப்போர் தகுந்த அங்கீகாரத்தினை அடைவார்கள்.
பெண்கள்:
குடும்ப ஸ்தானாதிபதி சனி ஜென்ம ராசியில் அமர்வதால் குடும்பப் பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரின் நலனுக்காக ஓயாது உழைப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் கௌரவம் உயரும். அவர்களின் வாழ்வினில் சுபநிகழ்வுகள் உண்டாகக் காண்பீர்கள். கணவரின் செயல்களுக்கு துணை நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தம்பதியராக இணைந்து செயல்களில் சிறப்பான வெற்றி காண்பீர்கள். கணவரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் உருமாறக்கூடும்.
தொழில் உத்யோகம்:
ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் இடத்தின் மீது சனி பகவானின் பார்வை விழுவதால் தொழில்முறையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். தொழில்முறை எதிரிகள் காணாமல் போவார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சிறுதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் தொடர்ந்து உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் ஆதரவால் முதலாளிகளும், உயரதிகாரிகளும் நன்மை அடையும் அதேநேரத்தில் உங்களிடமிருந்து பிரதி உபகாரத்தினை அவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பரிகாரம் :சனிதோறும் பூவரசு பலகையின் மேல் செவ்வக வடிவில் கொண்டைக் கடலையைப் பரப்பி அதன்மீது காமாட்சி அம்மன் விளக்கும், விளக்கினுள் லக்ஷ்மி தேவி உருவம் பதித்த தங்கக் காசினை வைத்து நெய் ஊற்றி மஞ்சள் நிற நூலினால் ஆன திரியை வடக்கு முகமாக ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வணங்க வாழ்வினில் வளம் பெறுவீர்கள். “நம: புஷ்கல காத்ராய ஸ்தூலரோம்ணேத வை நம: நமோ தீர்காய ஸூஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே”
மகரம்
ஏழரைச் சனியின் காலத்திற்குள் நுழையும் உங்களுக்கு துவக்கத்தில் பய உணர்வு தோன்றுவதில் வியப்பேதும் இல்லை. கடந்த மூன்று ஆண்டு காலமாக பதினொன்றாம் இடமாகிய லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பலவிதமான சௌகர்யங்களையும் ஏற்படுத்தித் தந்த சனி பகவான் தற்பொழுது விரய ஸ்தானம் ஆகிய 12ம் இடத்தில் வந்து அமர்வது சாதகமான அம்சம் அல்ல. ஏழரைச்சனியின் துவக்கத்தில் காரியத் தடைகள், மனக் குழப்பங்கள், பலவிதமான இன்னல்கள், இடம் விட்டு இடம் மாறுதல் போன்ற சிரமங்கள் தோன்றக்கூடும். தன ஸ்தானாதிபதி ஆகிய சனி பகவான் 12ல் சென்று அமர்வதால் சுகமான வாழ்வியல் நிலைக்கு சற்று சோதனைகள் உண்டாகும்.
வீடு, வண்டி, வாகனம், மனை போன்ற சொத்துக்கள் சொந்தமாக இருந்தாலும் அதனை சரியான நேரத்திற்கு அனுபவிக்க இயலாத சூழல் உண்டாகும். நமது அவசரத் தேவைக்கு வண்டி, வாகனங்கள் துணை புரியாது போவதால் மனதில் ஒருவித விரக்தியான எண்ணம் உருவாகும். சனி பகவானின் சிறப்புப் பார்வை உங்களின் வாக்கு ஸ்தானத்தின் மீது விழுகிறது. இடம், பொருள் அறிந்து பேசுவது அவசியம். உங்கள் வார்த்தைகளில் வெளிப்படும் கருத்துக்கள் அடுத்தவர்களின் பார்வையில் தவறாகப் பொருள் காணப்படலாம். உங்களால் லாபம் கண்டவர்கள் நீங்கள் செய்த உதவியை மறந்து போவார்கள். செய்நன்றி அற்றவர்களைக் கண்டு மனம் வருத்தமுறும். மற்றவர்களிடமிருந்து எவ்வித உதவியும் எதிர்பார்க்க இயலாது. தேவையற்ற பயத்தின் காரணமாக சரியான நேரத்தில் செயலில் இறங்காமல் காலம் தாழ்த்துவதால் தேடிவந்த வாய்ப்புகள் விலகிச் செல்லக் கூடும்.
மாணவர்கள்:
தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக தேர்வு நேரத்தில் எழுதும் வேகம் குறையக் கூடும். இதனைத் தவிர்க்க அன்றாடம் பாடங்களை எழுதிப் பார்ப்பதும், தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பதும் நல்லது. தனிமையில் இருக்கும்போது தேவையற்ற சிந்தனைகள் உங்களது கவனத்தை பாடத்தில் கொண்டு செல்லாது என்பதால் முடிந்தவரை தனிமையைத் தவிர்த்து நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும்.
பெண்கள்:
வீண் விவாதத்தால் குடும்பத்தில் பிரச்னைகள் தலையெடுக்கக் கூடும். சூழலை உணர்ந்து நிதானித்துப் பேசுவது நல்லது. கூட்டுக் குடும்பத்தில் உண்டாகும் சிறுசிறு பிரச்சினைகளில் விலகி நில்லுங்கள். உங்களின் தலையீட்டினால் பிரச்சினை பெரிதாகி குடும்பம் பிரிவதற்கான வாய்ப்பு உண்டு. கணவரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அவருடைய தேவையை அறிந்து நீங்கள்தான் அவருடைய பணிகளுக்குத் துணை நிற்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம்.
தொழில் உத்யோகம்:
தொழில்ரீதியாக சனி பாதகமான சூழ்நிலையில் இருப்பதால் பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டென்பதால் எச்சரிக்கை தேவை. முக்கியமாக வரவிருக்கும் மூன்று ஆண்டு காலத்திற்குள் லாபம் கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏற்கெனவே இருக்கும் சொத்துக்களை விற்க முயற்சிக்காதீர்கள். லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் உண்டாகாமல் காத்துக்கொள்ளும் நேரமிது.
பரிகாரம் :சிறிய பலகையின் மேல் வன்னிக்குச்சியை வைத்து அதன்மேல் எள்ளு தானியத்தை வில் வடிவில் பரப்பி எவர்சில்வர் விளக்கினில் நல்லெண்ணெய் ஊற்றி நீல நிற திரியினை மேற்கு முகமாக ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி நீலநிற சங்கு புஷ்பத்தால் சனி தோறும் அர்ச்சித்து வணங்க சங்கடங்கள் விலகும். “ஜ்ஞாநக்ஷூர் நமஸ்தேஸ்து கஸ்யபாத்மஜ ஸூநவே துஷ்டோ ததாஸி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்க்ஷணாத்”
கும்பம்
வரவிருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சிறப்பான நற்பலன்களை அடைய உள்ளீர்கள். இதுவரை ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் இடத்தில் அமர்ந்து தொழிலில் ஸ்திரத்தன்மையை அருளிய சனிபகவான் தற்போது லாப ஸ்தானம் ஆகிய 11ம் இடத்தில் அமர்ந்து செய்தொழிலில் லாபத்தினைத் தர உள்ளார். கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை ராசிநாதன் சனி 11ல் அமர்வது மிகச் சிறப்பான அம்சமாகும். நினைத்ததை சாதிக்கும் திறன் பெறுவீர்கள். பொதுவாக ராசிக்கு 11ல் சனி வரும் சமயம் பல்வேறு வழிகளில் செல்வம் சேரும் என்பார்கள். நெடுநாட்களாக தடைபட்டு வரும் சுபநிகழ்வுகள் இல்லத்தில் இனிதே நடைபெறும். திருமணத்தடை கண்டவர்கள், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என எல்லோரும் தடைவிலகி சுபம் நடக்கக் காண்பார்கள்.
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் மனநிலை உண்டாகும். சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் இடத்தினை சனி பார்ப்பதால் சிந்தனையில் தெளிவு பிறப்பதோடு எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நெடுநாட்களாக நிலுவையில் இருந்து வரும் வழக்குப் பிரச்னைகள் விரைவில் முடிவிற்கு வரும். கடன் சுமை எதிர்பாராத வகையில் காணாமல் போகும். தனாதிபதி குருவும் தற்போது சாதகமாக சஞ்சரிப்பதால் நிலுவையில் இருக்கும் பாக்கித் தொகைகள் வசூலாகும். வண்டி, வாகனங்கள், வீடு, மனை போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் சேரும். நினைத்த காரியம் கைகூட 11ம் இடம் வலுப்பெற்றிருக்க வேண்டும். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளும் அப்பேற்பட்ட வலுவான இடத்தில் ராசிநாதன் சனி பகவான் வந்து அமர்வதால் நினைத்த காரியம் உடனடியாக நடக்கக் காண்பீர்கள்.
மாணவர்கள்:
தங்கள் கல்வி நிலையில் எழுத்துத்திறனின் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டிகள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் முன்னிலை வகிப்பார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பிரபலமடையும் யோகம் உண்டு.
பெண்கள்:
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்ப விவகாரங்களில் உங்களின் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறும். பிள்ளைகளின் செயல்களில் இருந்து வரும் சுணக்க நிலை மாறி உங்களின் தூண்டுதலால் உற்சாகமாகச் செயல்படுவர். கணவரின் பணிகளுக்கு உதவிகரமாய் செயல்பட வேண்டியிருக்கும். அவரது தொழில் முறையில் உங்களின் இணைவு விரைவான வெற்றியைப் பெற்றுத் தரும். பண விவகாரங்களைக் கையாளும்போது தனிமையைத் தவிர்த்து தகுந்த துணையுடன் செல்வது நல்லது.
தொழில் உத்யோகம்:
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வினைக் காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலைச் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவத் துறையினர், நீதித்துறையினர், ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. சுயதொழில் செய்து வருவோர் நிர்வாகத்திறன் அதிகரிக்கக் காண்பார்கள். தொழிற்சாலை அதிபர்கள் தொழிலாளிகளால் நன்மை அடைவர்.
பரிகாரம் :சனிதோறும் மாமரத்தினால் ஆன பலகையின் மேல் சிறிது அறுகம்புல்லை வைத்து அதன் மீது எள்ளு தானியத்தை சூல வடிவில் பரப்பி மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு நீலநிற திரியினை மேற்கு முகமாக ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி நீலநிற மலர்களால் அர்ச்சித்து வணங்கி வர சனியின் அருள் பூரணமாகக் கிடைக்கும். “நமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீக்ஷ்யாய வை நம: நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கபாலிநே.”
மீனம்
ஒன்பதாம் இடமாகிய பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் இடத்திற்கு சனி பகவான் இடம் பெயர்ந்திருப்பது உங்களுக்கு சாதகமான அம்சமே. இதுநாள் வரை பொறுமை காத்து வந்ததற்கான பலனை அடைய உள்ளீர்கள்.பொதுவாக 10ம் இடத்திற்கு சனி வரும்போது பதவி பறிபோகுதல், நற்பெயருக்கு களங்கம் தோன்றுதல் ஆகிய பலன்களைச் சந்திக்க நேரிடும் என்பார்கள். ஆயினும் மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் லாபாதிபதி என்பதால் அவர் ஜீவன ஸ்தானத்தில் அமர்வதால் பொதுப்பலனாகச் சொல்லப்படும் தீய பலன்கள் விலகி தொழில்முறையில் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். உங்களின் உழைப்பின் பெருமையை மற்றவர்கள் உணரும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமையும். படபடப்பின்றி நிதானமாகச் செயல்பட்டால் காரியவெற்றி என்பது சாத்தியமாகும்.
இக்கட்டான சூழலில் அமைதி காப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும். அடுத்தவர்களின் பேச்சினில் வெளிப்படும் கருத்துக்களை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு பொது அறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள். உறவினர் ஒருவருக்கு அவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்ய இயலாது போகலாம். இதனால் சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் உண்டாகும் வாய்ப்பு உண்டு. அடுத்தவர்களின் ஏச்சிற்கும், பேச்சிற்கும் மதிப்பளிக்காது உங்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றி வாருங்கள். உங்களின் செயல்களுக்கான காரணத்தை பிற்காலத்தில் புரிந்து கொள்வார்கள். அரசாங்க காரியங்கள் சற்று தடைபடும் வாய்ப்பு நிலவுகிறது. பெற்றோரின் உடல்நிலையில் அவசியம் அக்கறை கொள்ள வேண்டிய நேரம் இது.
மாணவர்கள்:
தங்கள் கல்வியில் தேக்க நிலையைக் காண நேரிடும். பிராக்டிகல் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் நீங்கள் தியரி சார்ந்த தேர்வுகளில் சற்று சுணக்கம் காண்பீர்கள். அவ்வாறில்லாமல் இரண்டிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அரும்பாடுபட்டு உழைத்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும் என்பதை உணர்ந்துகொள்வது நல்லது. அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
பெண்கள்:
கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருவோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் எடுத்த பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். விரதம் என்ற பெயரில் பட்டினி இருக்காமல் திரவ உணவினையாவது உட்கொள்வது நல்லது. களத்ர ஸ்தானத்தை சனி பகவான் தனது சிறப்புப் பார்வையின் மூலம் கவனிப்பதால் கணவரின் செயல்களில் முன்னேற்றம் தரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உணர்வீர்கள். அவரது வெற்றிக்காக நீங்கள் பக்கபலமாக துணை நிற்பீர்கள். உங்களது ஆலோசனைகள் அவரை திறம்பட வழிநடத்திச் செல்லும். கணவரின் சுற்றத்தாருக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்ய வேண்டியிருக்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.
தொழில் உத்யோகம்:
அரசாங்கப் பணியாளர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்விற்கான வாய்ப்பினைத் தேட நேரிடும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை சனி பகவான் நிச்சயம் பெற்றுத் தருவார். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றி வெற்றி காண்பார்கள். கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும்.10ம் இடத்துச் சனி தொழிலைக் கெடுப்பார் என்ற கருத்தினை மாற்றி அமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
பரிகாரம் :சனிதோறும் பூவரசு மரத்தினால் ஆன பலகையின் மேல் வெள்ளை கொண்டைக் கடலையை செவ்வக வடிவத்தில் பரப்பி அதன் மேல் வெண்கல அகல் விளக்கில் நெய் ஊற்றி மஞ்சள் நிற திரியை வடகிழக்கு முகமாக ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வர உயர்வடைவீர்கள். “அதோத்ருஷ்டே நமஸ்தே அஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே நமோ மந்தகதே துப்யம் நிஸ்த்ரிம்ஸாய நமோஸ்துதே.”
Comments
Post a Comment